பசுமை விகடனில் எங்களின் அடுத்த பயணம்.
எங்களை மேலும் மேலும் ஊக்கிவித்திடும் பசுமை விகடனுக்கு நன்றி
http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=93382
எங்களை மேலும் மேலும் ஊக்கிவித்திடும் பசுமை விகடனுக்கு நன்றி
http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=93382
''இனி, விற்பனைக்குக் கவலையில்லை!''
விவசாயிகளே உருவாக்கிய வியாபார நிறுவனம்!
த. ஜெயகுமார்
'நல்லவாயன் சம்பாதிச்சத நாறவாயன் திங்குறான்’ என்று கிராமங்களில் சொல்வார்கள். அது, விவசாயிகளுக்குத்தான் சரியாகப் பொருந்தும். கடன்பட்டு, கஷ்டப்பட்டு, வியர்வை சிந்தி விளைவித்தாலும், விவசாயிகளுக்குப் பெரிய லாபம் கிடைத்துவிடுவதில்லை. அதேசமயம், அந்த விளைபொருட்களை வாங்கி விற்கும் இடைத்தரகர்களோ... பெரியளவில் லாபம் சம்பாதித்து வருகிறார்கள்.
இது, காலகாலமாக நீடிக்கும் முரண்பாடு. அடிமட்டம் முதல் நுனிமட்டம் வரை அரசாங்கத்தில் அத்தனை பேருக்கும் இது தெரிந்தாலும், அணு வளவும் மாற்றம் என்பதே இல்லை. இதனால், 'நம்மால் என்ன செய்ய முடியும்?’ என்ற விரக்தியில் வீழ்ந்து கிடக்கிறது... விவசாய வர்க்கம்!
இதற்கு நடுவே, 'புலம்பிக் கொண்டிருப்பதில் எந்தப் பலனும் இல்லை’ எனப் புரிந்து கொண்ட தர்மபுரி மாவட்ட விவசாயிகள், விற்பனையையும் கையில் எடுத்து விட்டார்கள். 10.2.12-ம் தேதியிட்ட இதழில், 'ஆத்மா விவசாயிகள் சங்கத்தின் அசத்தல் சாகுபடி’ என்ற தலைப்பில் பென்னாகரம் பகுதி விவசாயிகளைப் பற்றி எழுதியிருந்தோம். அவர்கள்தான், தற்போது இந்தியாவிலேயே முதன்முறையாக, சிறுதானிய விற்பனைக்கென்றும் ஒரு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளனர்.
இதுபற்றிப் பேசினார், தர்மபுரி மாவட்ட சிறுதானிய விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சிவலிங்கம். 'தர்மபுரி மாவட்டத்துல விளையற சிறுதானியங்கள் வறட்சியைத் தாங்கி விளையறதால நல்ல ருசியா இருக்கும். ஒரு காலத்துல மாவட்டம் முழுசும் சிறுதானியங்கள் விளைஞ்சது. இப்போ, பென்னாகரம் பகுதியை ஒட்டியுள்ள கிராமங்கள்லயும், மலைப்பகுதிகள்லயும் மட்டும்தான்... சாமை, தினை, வரகு, பனிவரகு, சோளம், கேழ்வரகு, அவரை, துவரைனு சாகுபடி செய்றாங்க. மானாவாரி நிலம்கிறதால... ரசாயனமே பயன்படுத்துறது கிடையாது. ஏற்கெனவே காய்கறிகள சந்தைப்படுத்துன அனுபவத்த வெச்சுதான் இந்த உற்பத்தியாளர் நிறுவனத்தைத் தொடங்கியிருக்கோம்'' என்ற சிவலிங்கம், தொடர்ந்தார்.
''50 கிராமங்களைச் சேர்ந்த, 1,000 விவசாயிகளை ஒருங்கிணைச்சு, 50 உழவர் குழுக்கள் அமைச்சுருக்கோம். ஒரு விவசாயிக்கு 1,000 ரூபாய் உறுப்பினர் கட்டணம். இதை டெபாசிட் தொகையா வரவு வெச்சுடுவோம். இதன் மூலமா 10 லட்ச ரூபாய் கிடைச்சுருக்கு. கூடவே, 'எஸ்.எஃப்.ஏ.சி.' (ஷினீணீறீறீ திணீக்ஷீனீமீக்ஷீs கிரீக்ஷீவீ தீusவீஸீமீss சிஷீஸீsஷீக்ஷீtவீuனீ) மூலமா 10 லட்ச ரூபாய் ஊக்கத்தொகையாகக் கிடைக்குது. மொத்தம் இருக்கற இந்த 20 லட்ச ரூபாய் மூலமாத்தான் கம்பெனியை நடத்தப் போறோம். விவசாயிகள் கொண்டு வர்ற தானியங்களுக்கு ரசீது போட்டு அப்பவே பணத்தைக் கொடுத்துட்டு, விற்பனைக்குப் பிறகு கிடைக்கற லாபத்தை கம்பெனி பேர்ல வரவு வெச்சுடுவோம். 5 வருஷத்துக்கு ஒரு தடவை, லாபத்தைப் பிரிச்சுக்கலாம்னு இருக்கோம்.
தானியங்கள பென்னாகரத்தில் இருக்குற ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்துல இருப்பு வைக்கறதுக்கும் ஏற்பாடு செஞ்சுட்டிருக்கோம். உறுப்பினர்கள் இல்லாம, மத்த விவசாயிகள்கிட்ட இருந்தும் கொள்முதல் செய்யப் போறோம். தானியங்களுக்குக் கூடுதல் விலை கிடைக்கறதுக்காக மதிப்புக்கூட்டி விற்பனை செய்றதுக்கான கருவிகளையும், அதுக்கான இடத்தை சொந்தமா வாங்கற திட்டமும் இருக்கு. மாவட்ட வேளாண்துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை அதிகாரிகள் எல்லா வகையிலயும் இதுக்கு உதவி செய்றாங்க'' என்று நன்றி சொன்னார் சிவலிங்கம்.
தொடர்ந்தவர், ''சிறுதானியங்கள் பத்தி மக்கள்ட்ட விழிப்பு உணர்வு இருக்கறதால, வியாபாரிகள் சிறுதானியங்கள தேடி வந்து மொத்தமா வாங்கறதுக்கு வாய்ப்பிருக்கு. அதனால, விவசாயிகளுக்குக் கூடுதல் விலை கிடைக்கவும் வாய்ப்பிருக்கு. விக்கிறதுக்கு சந்தையைத் தேட வேண்டிய அவசியம் இல்ல. நம்ம இடத்திலே இருந்தே வித்து சம்பாதிக்க முடியும்னு நம்பிக்கை வந்திருக்கு. எப்பவும் 'பசுமை விகடன்’ எங்களோட முயற்சிகளுக்கு உறுதுணையா இருந்துட்டு இருக்கு. 2011-ம் வருஷத்துல ஆத்மா இயற்கை விவசாய விளைபொருள் உற்பத்தியாளர் நலக் குழுவைத் தொடங்கி, பாகல், புடலை, சுரைக்காய்னு வெளைஞ்சு விற்பனை செஞ்சோம். அந்த முயற்சியை பசுமை விகடன் வெளியிட்டு கௌரவபடுத்திச்சு. அந்த உற்சாகம்தான் இப்போ சிறுதானியம் உற்பத்தியாளர் நிறுவனத்தைத் தொடங்க வெச்சுருக்கு'' என்றார் தெம்பாக!
உற்பத்தியாளர் நிறுவனத்தின் குழுவில் இருக்கும் பனைகுளம் ஊராட்சியைச் சேர்ந்த முருகன், ''மலை கிராமங்களான எங்க பகுதியில மழைக் காலத்துல மானாவாரியா சிறுதானியங்கள விதைப்போம். அறுவடை செய்யுறதை சந்தையில வந்த விலைக்குத்தான் வித்துட்டிருந்தோம். இப்போ கம்பெனியில, உறுப்பினரா இருக்கறதால விலைக்கு ஒரு உத்தரவாதம் கிடைச்சுருக்கு. இனி, நம்பிக்கையோடு விதைப்போம்'' என்றார், மகிழ்ச்சியுடன்.
தர்மபுரி மாவட்ட வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறையினரிடம் பேசியபோது, ''மத்திய அரசால், உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் (Farmer producers company) என்ற பெயரில் தொடங்கப்பட்டது, இத்திட்டம். குறைந்தபட்சம் இதில் 1,000 விவசாயிகள் குழுவாகச் சேர்ந்து கம்பெனி பதிவுச் சட்டத்தின்படி பதிவு செய்து தங்கள் உற்பத்திப் பொருட்களை விற்கலாம். இந்நிறுவனத்தின் மூலம் ஒரே இடத்தில் மொத்தமாக வியாபாரிகளிடம் விற்கமுடியும். விவசாயிகளே குழுவாக இருப்பதால், அவர்களுக்குள்ளே இயக்குநர், நிர்வாக இயக்குநரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். குழுவாக இணைந்து அவர்களே முடிவுகள் எடுப்பதால் யாரையும் ஏமாற்ற வாய்ப்பு இல்லை.
நெல், காய்கறிகள், சிறுதானியங்கள் என அந்தந்தப் பகுதியில் எந்த பயிர் அதிகமாக விளைவிக்கப்படுகிறதோ... அதற்கெனெ உற்பத்தியாளர் கம்பெனியைத் தொடங்கலாம். எஸ்.எஃப்.ஏ.சி. மூலமாக ஊக்கத்தொகையும் கிடைக்கிறது. ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் விளைபொருட்களை சேமித்து வைத்துக் கொள்ள முடியும். உற்பத்தியாளர் கம்பெனியைத் தொடங்க விரும்புவோர், அந்தந்த மாவட்ட வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறையிடம் அணுகலாம்'' என்று சொன்னார்கள்.
தொடர்புக்கு,சிவலிங்கம், செல்போன்: 97875-45231