Tuesday, November 19, 2013


ஆத்மா இயற்கை விவசாய விளைபொருள் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம்

                                                            



        
                                                                                                  பதிவு எண் ; 102/2011
                                                                                                                                                     கெளரிசெட்டிபட்டி,
                                                                                                  பிக்கம்பட்டி அஞ்சல்,
                                                                                                  பென்னாகரம் வட்டம்,
                                                                                                  தருமபுரி மாவட்டம்.


கேரளா மாநில பட்டறிவு பயணம் இயற்கை விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதம்

வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை ஆத்மா திட்டத்தின் கீழ் 26-03-2012 முதல் 29-03-2012 வரை இயற்கை வேளாண்மை சாகுபடியில் ஈடுபட்டுள்ள 50 விவசாயிகள் தருமபுரி மாவட்ட வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண்மை வணிகத்துறையின் மூலம் பட்டறிவு பயண்மாக கேரள மாநிலம் சென்று வந்தோம்

இந்திய இயற்கை விவசாயிகள் உற்பத்தியாளர்கள் கம்பெனி லிமிடெட்ஆளுவாஎன்ற இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் நிர்வாக இயக்குனர் டாக்டர் ராய் சூரியன் அவர்களை, கோயமுத்தூர் தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில் சந்தித்து கலந்துரையாடினோம். டாக்டர் ராய் சூரியன் அவர்கள் indian organic producer company ஆரம்பித்ததின் நோக்கம் மற்றும் கேரள, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களை சார்ந்திராத 900 இயற்கை விவசாயிகளை உறுப்பினர்களாக கொண்டு indian organic producer company நிறுவனம் செயல்படுவதாக தெரிவித்தார். மேலும் இயற்கை தரச்சான்று இந்தியாவிலேயே முதலாவதாகவும் ஆசிய கண்டத்திலேயே முதலாவதாகவும் பெற்ற பெருமைக்குறிய நிறுவனம் indian organic producer company என படவிள்க்கங்களுடன் எங்களுக்கு விளக்கி கூறினார். அவரது சந்திப்பு எங்களது ஆத்மா இயற்கை விவசாய விளைபொருள் உற்பத்தியாளர்கள் நலச்சங்க வள்ர்ச்சிக்கு பயனாக உள்ளது. மேலும் எங்களது செயல்பாடுகளை சிறப்பாக கொண்டு செல்ல பேருதவியாக அமைந்தது.

சந்தை தகவல் முன்னறிவிப்பு என்ற தலைப்பின் கீழ் tnau  பேராசிரியை ரோகினி அவர்கள் பட விளக்கங்களுடன் விளக்கி கூறினார்கள். அதோடு இல்லாமல் எங்களது 50 விவசாயிகளின் அலைபேசி எண்களை பெற்று விலை முன்னறிவிப்பு விபரங்களை குறுங்தகவல் மூலம் அனுப்புவதாக தெரிவித்தார்கள். இதனால் வரும் காலங்களில் விலை முன்னறிவிப்பு தகவல்கள் அறிந்து பயிற் சாகுபடி செய்திடவும், விற்பனையின் போது பயனுள்ளதாக அமையும். கடந்த காலங்களில் மஞ்சள், எள் போன்ற பயிற்களில் இதன் பயனை அனுபவ ரீதியாக உண்ர்ந்தோம்.
அடுத்து ஏற்றுமதியில் இயற்கை வேளாண்மை என்ற தலைப்பில் பேராசியர் டக்டர்.செந்தில்குமார் அவர்கள் power point மூலம் படவிள்க்கங்களுடன் இயற்கை வேளாண்மையில் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தை வாய்ப்புகள் குறித்து எங்களுக்கு விளக்கி கூறினார். ஏற்றுமதிக்கான வழிமுறைளை விளக்கி கூறினார்.

கோயமுத்தூர் மேட்டுப்பளையம் சாலையில் உள்ள  m g r  காய்கறி ஒட்டுமொத்த அங்காடியில் sa vegetables  நிறுவனத்தின் உரிமையாளர் திரு. பஷிர் அவர்களை நேரில் கண்டு காய்கறிகள் எந்த பருவத்தில் சாகுபடி செய்தால் சந்தையில் டிமாண்டு உள்ளது, விற்பனைக்கு காய்கறிகளை தரம்பிரித்து, எந்த சமயத்தில் கொண்டு வருவது எனவும், கோயமுத்தூர் கேரளா மர்க்கெட்டிற்க்கு ஏற்ற காய்கறி இரகங்கள், சகுபடி பருவம், சகுபடி முறைகள் குறித்தும் விளக்கி பழரசத்துடன் உபசரித்து விளக்கி கூறினார். அதோடில்லாமல் மார்க்கெட் முழுவதும் சுற்றிப்பார்த்து இதர வியாபாரிகளையும் சந்தித்து அவர்களது காய்கறிகளின் தேவைகளையும் கேட்டறிந்தோம். பின்னர் மதியம் கொழிஞ்சியாம்பாறை என்ற இடத்தில்  ( பாலக்கடு ) ரிலையன்ஸ் நிறுவனத்தின் இருமாநில ( தமிழ்நாடு, கேரளா ) collection centre ற்கு சென்று  ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு காய்கறிகள் மற்றும் பழங்களை நுகர்வோர் விரும்பும் வண்ணம் எவ்வாறு தரம்பிரித்து எந்த அளவில் விற்பனைக்கு கொண்டுவர வேண்டும் என்பதை நேரில் திரு. நாகராஜ் ரிலையன்ஸ் அதிகாரி அவர்களின் மூலம் நேரில் கண்டோம். மேலும் தரம்பிரிப்பதில் மேசை, பிளஸ்டிக் கிரேடு, பாலித்தீன் வலை பை, முதலியவற்றின் உபயோகங்கள்மற்றும் எந்தவித காய்கறிகளை எந்தவிதமான பேக்கிங்கில் கொண்டு வர வேண்டும், அறுவடை தருணம் முதலியவற்றை விள்க்கி கூறினார்.  மேலும் எங்களது இயற்கை விவசாயிகளை ரிலையன்ஸ் நிறுவனத்தினர் நன்கு உபசரித்து அனுப்பினார்கள். INDIAN ORGANIC PRODUCE COMPANY  விவசய குழுக்களை பலாக்காடு முதல் மன்னார்காடு செல்லும் வழியில் சந்தித்து மூன்று அடுக்கு முறையில் இயற்கை விவசாயம் செய்யும் முறைகள் குறித்தும் சாகுபடி அனுபவங்கள் நேரில் கண்டு கேரள மாநில இயற்கை விவசாயிகளின் அனுபவங்களை நேரில் கண்டு கேட்டறிந்து வந்தோம். இந்த வயல்வெளி அனுபவ பயண்ம் மிகமிக பயனுள்ளதாக இருந்தது..

இயற்கை விவசாயிகள் குழுவினர் தென்னை, வாழை, மா, சப்போட்டா, நெல்லி முதலியவற்றில் மதிப்பு கூட்டி உண்வு பதப்படுத்துதல் செய்யும்  FOOD PROCESSING INDUSTRY  யை நேரில் கண்டு பிரமிப்பு அடைந்தோம். காரணம், விவசாயிகள் தொழில் முனைவோராக உண்வு பதப்படுத்துதலில் சாதனை அடைந்து அமெரிக்கா, ஆஸ்திரேலியா, அரபு நாடுகள் ஆகியவற்றிற்க்கு  ORGAINC CERTIFICATION னுடன் கவர்ச்சிகரமான பாக்கெட்டுகளில் விற்பனை மேற்கொள்வதை நேரில் பார்த்து வந்தோம்.

மேலும் இந்தியாவிலேயே ORGANIC CERTIFICATION  முதல் முறையாக பெற்ற சான்றிதழ்களை பார்த்தோம். இது எங்கள்து குழுவினர்க்கு உற்சாகத்தையும், தன்னம்பிக்கையையும் உண்டாக்கியது. இது போன்று  நாங்களும் மரியாதைக்குரிய தருமபுரி மவட்ட ஆட்சியர் அவர்களின் அதரவுடன் செயல்படுத்த முடியும் என்று எங்களது மனதில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
[

அடுத்து கோட்டக்கல் ஆரிய வைத்தியசாலை என்ற நிறுவனத்தின் 150 ஏக்கர் மருத்துவ மூலிகை தோட்டப் பண்ணையினை நேரில் சுற்றிப்பார்த்தோம். மூலிகை சாகுபடியில் இயற்கைமுறையில் எவ்வாறு ஈடுபடுவது இயற்கை மருத்துவத்தில் மூலிகை பயிர்களின் தேவைகள் குறித்து அறிந்து கொண்டோம். இந்த பண்ணை வழி மூலிகை சாகுபடி முறைகள் தருமபுரி மாவட்ட விவசாயிகளுக்கு ஒரு புதிய செய்தியாக இருந்தது.

மேலும் ஆளுவா ( ALUVA ) INDOCERT   என்ற இயற்கை விளைபொருள் சான்று வழங்கும் நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் தோம்சன் அவர்களை சந்தித்து இயற்கை தரச்சான்று பெறும் வழிமுறைகள், தனி விவசாயி, குழுவாக விவசாயிகள் சான்று பெறும் முறைகள் கட்டணம் உள்ளிட்டவைகளை  நேரில் கேட்டறிந்து வந்தோம்..
பின்னர் கொச்சி ஒட்டுமொத்த காய்கறி பழங்கள் மார்க்கெட்டை அதிகாலையில் சென்று மார்க்கெட் செயலாளர் திரு. ஜொசி அவர்களை சந்தித்தோம் அவர் கூறுகையில் செவ்வாழை, G-9  நேந்திரன், பூவன், ரஸ்தாளி போன்ற வாழை இரகங்கள் கொச்சி மார்க்கெட்க்கு விற்பனை வாய்ப்புக்ள் குறித்தும், எந்த நேரத்தில் விற்பனைக்கு கொண்டுவர வேண்டும்என்பது போன்ற தகவல்களை தெரிந்து கொண்டோம். முலாம்பழம், வெண்டை, தக்காளி. சாம்பார் வெள்ளரி, பாகல், பீர்க்கன், புடலை, மேலும்  GREEN LONG  கத்திரிக்காய் உள்ளிட்டவைகளின் வியாபாரவாய்ப்புகளையும் வியாபாரிகளின் முகவரி மற்றும் செல்போன் எண்களையும் பெற்றுவந்தோம்.
பின்னர், யூரோப் நாட்டு நிதியுதவியுடன் 46 ஏக்கரில் துவங்கப்பட்ட மருடு ஒட்டுமொத்த காய்கறிகள் மற்றும் பழங்கள் மர்க்கெட்டை நேரில் சென்று பார்த்தோம். தற்சமயம் இந்த  TERMINAL MARKET கேரளா  அரசங்கத்தின் வேளாண்மை துறையின் முலம் செயல்படுத்தப்படுகிறது. இங்கு காய்கறிகள் மற்றும் பழங்கள் ஏலம் விடும் முறை குறித்தும் நேரில் பார்த்தோம். இந்த மார்க்கெட்டின் செயலாளர் திருமத். SHERLY  அவர்கள் எங்களை  ஒரு கூட்ட அரங்கில் அமர வைத்து கூறுகையில் இங்கு விற்பனைக்கு காய்கறிகள் மற்றும் பழங்கள் கொண்டுவரும் விவசாயிகளுக்கு 1 கிலோவிற்கு 1 ரூபாய் அதவது 5000 கிலோ கொண்டு வந்தால் 5000 ரூபாய் ஊக்கத்தொகையாக ஒரு விவசாயிக்கு தருகிறார்கள். இறக்குகூலி இலவசம், விவசாயிகள் ஓய்வெடுக்க ஓய்வு அறை, கேண்டின் வசதி லாரி வாடகையில் 1 % ஊக்கதொகையாக வழங்கி விவசாயிகளை ஊக்கப்படுத்துகிறார்கள். காய்கறி மற்றும் பழங்கள் ஏலம் நடத்தி ஏலபணத்தினை விவசாயினுடைய வங்கிக்கணக்கில் பணத்தை சேர்த்து விடுகிறார்கள். இந்த மார்க்கெட்டில் விவசாயிகளுக்கு செய்யும் சலுகைகள் எங்களுக்கு பெரும் ஆச்சரியத்தையும், எதிர்பார்ப்பையும் உண்டாக்கி விட்டது. இதுபோன்று நம் மாவட்டத்திலும் மரியாதைக்குரிய மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் செயல்படுத்த நடவடிக்கை எடுப்பார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. இயற்கை விவசாயிகளுக்கு தாயுள்ளத்தோடு உதவி செய்யும் மாவட்ட ஆட்சித் தலைவர் இதில் கருணையோடு செயல்படுத்த வேண்டுகிறோம்.

அடுத்து எர்ணாகுளத்தில்  AVT நிறுவனத்தில் EXPORT  மையத்தை INFOTECH என்ற உலக தரம் வாய்ந்த மையத்தில் பார்வையிட்டோம். ( CSEZ- CENTRAL SPECIAL EXPORT ZONE )

இங்கு வாழை, ஜெர்பீரா, கார்னெகன், அந்தூரியம், ரோஜா, ஆர்கிடஸ் முதலிய ஏற்றுமதி பூக்கள் நாற்றுகள் உற்பத்தி செய்யும் கல்சா மையத்தையும் பபுலிவாவுஸ் மூலம் பசுமை குடில் மேற்கண்ட் பூக்கள் சாகுபடி செய்வது, விற்பனை வாய்ப்புகள், ஏற்றுமதி செய்யும் முறைகள் குறித்து நேரில் கண்டு சில வகைகளின் நாற்றுகளை வாங்கி வந்தோம். இங்கு செல்ல பல்வேறு செக்யூரிட்டி சோதனைகளுக்கிடையில் எங்களை எல்லம் இந்த நிறுவனத்திற்கு உள்ள செல்ல வாய்ப்புகளை வனதுறை அதிகாரிகள் ஏற்படுத்தி தந்தனர்.

அடுத்து எர்ணகுளம், காக்கநாடு என்ற இடத்தில் விவசாய சுய உதவி குழுக்களின் கூட்டமைப்பு தலைமையகங்களுக்கு சென்றோம்.  FRUIT AND VEGETABLE PROMOTE COUNCIL KERALAL  என்ற அலுவலகத்தில் டாக்டர் அஜ்மா துணை இயக்குநர் அவர்களை சந்தித்தோம். எங்களை எல்லாம் ஒரு கூட்ட அரங்கில் உட்கார வைத்து  FVPCK  ன் செயல்பாடுகள் குறித்து கூறுகையில் கேரளா மாநிலத்தின் 7000 விவசாய சுய உதவி குழுக்கள் இயங்குவதாகவும், 170000 விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளதாக தெரிவித்தார்கள்.  இந்த விவசாய சுய உதவி குழு கூட்டமைப்பிற்கு கேரளா மாநிலத்தின் வேளாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் தலைவராகவும், தலைமை செயலாளர், நிதித்துறை செயலாளர், வேளாண்மைத்துறை செயலாளர், நபார்டு சேர்மேன், NHM  இயக்குனர், கூட்டுறவு சங்கங்களின் தலைமை பதிவாளர், நான்கு விவசாய பிரதிநிதிகள் ( இதில் ஒரு மகளிர் விவசாயி  ) ஆகியோர்களை  இயக்குநர்களாக கொண்டு செயல்படுகிறது. கம்பெனி சட்டத்தின் படி இந்த கூட்டமைப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விவசாய சுய உதவிக்குழு கூட்டமைப்பில் உள்ள ஒரு குழுவில் 20 விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் ஆண்டின் துவக்கத்தில் ஓராண்டிற்கான பயிர் சாகுபடி குறித்து திட்டமிடுகிறார்கள். மேலும் பொருளாதார சர்வே  உட்பட அனத்து விவரங்களையும் குழு உறுப்பினர்களிடம் சேகரிக்கிறார்கள். பின்னர் இந்த 20 உறுப்பினர்களிடையே ஒரு உற்பத்தி தலைவர், ஒரு கிரிடிட் தலைவர் ஒரு விற்பனைத் தலைவர் என மூன்று நிர்வாகிகளை தேர்வு செய்கிறார்கள். இந்த நிர்வாகிகள் சுழற்சி அடிப்படையில் ஓராண்டு காலத்திற்குள் முறை வைத்து குழு உறுப்பினர்கள் அனைவரும் வந்துவிடுவார்கள்.

உற்பத்தி தலைவர் பயிர் சாகுபடி முறைகள் குறித்து ஒவ்வொரு விவசாயிக்கும் தனி பதிவேடு பராமரித்து கண்காணிப்பார், கிரிடிட் தலைவர் ஒவ்வொரு விவசாயிக்கும் பண தேவைகள் பயிர் சாகுபடி செய்ய இருப்பின் வங்கிகளில் தொடர்பு கொண்டு பெற்று தருவார். பின்னர் கடன் பெற்ற விவசாயிகள் கடனை திரும்ப வங்கிகளில் செலுத்துகிறர்களா என்பதை கண்காணிக்கிறார்கள். விற்பனைத் தலைவர் குழு விவசாயிகள் உற்பத்தி செய்த விளைபொருட்களை விற்பனை செய்யவும் தினசரி விலை விபரங்களை சேகரிப்பதும், விற்பனை மையங்களுக்கு தெரிய்ப்படுத்துவதும் இவரின் செயலாகும்.
பாலக்காட்டில் துவங்கி திருவனந்தபுரம் வரை 250 விற்பனை மையங்கள்  FVPCK  மூலம் ஏற்படுத்தியுள்ளார்கள். பாலக்காட்டிலிருந்து திருவனந்தபுரம் வரை தொடர்ச்சியாக கேரளா மக்கள் வசிக்கின்ற காரணத்தினால் 10 கி. மீட்டர் சுற்றளவில் ஒரு விற்பனை மையம் உள்ளது. இந்த 10  கி. மீட்டர் சுற்றளவில் உள்ள மக்கள் தொகை, வீடுகள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனை, விடுதிகள் முதலியவற்றை சர்வே செய்து விளை பொருட்களை இந்த விற்பனை மையத்தில் வைத்துள்ளார்கள்.

இதனால் அந்தந்த பகுதியில் உள்ள சுய உதவி குழுக்களின் விளைபொருள் அந்தந்த பகுதியில் உள்ள விற்பனை மையத்தில் விற்பனையாகிறது

அதோடல்லாமல் கேரளா மாநிலத்தின் 10 இடங்களில் சேகரிப்பு மையங்களை துவக்கி கூடுதலாக உள்ள விளைப் பொருட்களை இந்த இடங்களுக்கு  FVPCK  வாகனத்தின் மூலம் கொண்டு சென்று தேவைப்படும் இடங்களுக்கு பிரித்து அனுப்புகிறார்கள்.  170000  விவசாயிகளுக்கு தேவையான விதைகள், உரங்கள், கருவிகள், முதலியவற்றை FVPCK   வழங்குகிறது. மூன்று முதல் 5 வருவாய் கிராமங்களுக்கு FVPCK  ன் மூலம்,  B.sc Agri, Msc agri, MSW, B.A, Co-op  போன்ற பட்டதரிகளை நியமித்து ஒவ்வொரு விவசாயியையும் நேரடி கண்காணிப்பில் வைத்து ஒவ்வொரு செயலையும் பதிவேட்டில் பதிவு செய்து விவசாயின் பொருளாதாரத்தில் சுயமாக, நேர்மையாக, உற்பத்தி செய்த விளைபொருளை தானே விலை நிர்ணயம் செய்து பொருளாதார ரீதியில் மேம்பட்டு வருவது உலக அதிசங்களில் 8 வது அதிசயமாகும். இந்த அதிசயத்தை நம் தமிழகத்தில் செயல்படுத்தவும் பரிசார்த்த அடிப்படையில் தருமபுரி மாவட்டத்தில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கவும் மரியாதைக்குரிய தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களையும், தமிழக அரசையும் வேண்டி விவசாயிகளின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.இந்த கேரளா மநில பட்டறிவு பயணத்திற்கு ஆத்மா திட்டத்தில் எங்களது வேண்டுகோளை ஏற்று நிதி ஒதுக்கிய மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி லில்லி   I A S  அவர்களுக்கும், மாவட்ட வேளண்மை துணை இயக்குனர் வணிகம் திரு. செல்வம் அவர்களுக்கும் விவசாய நலனில் அக்கறையுள்ள எங்களது தருமபுரி வேளண்மை அலுவலர் வேளாண் வணிகம் திரு தா. தாம்சன்
அவர்களுக்கும், அவர்களோடு இணைந்து பணியற்றும் உதவி வேளாண்மை அலுவலருக்கும் எங்களது விவசாயிகளின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்றோம்.

மேலும், கேரளா மநில பட்டறிவு பயணத்திற்கு போக்குவரத்து, தங்கும் இடம், உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளை சிறப்புடன்  செய்த தருமபுரி வேளாண்மை அலுவலர் வேளாண்மை வணிகம் திரு த. தம்சன் அவர்களுக்கு மீண்டும் ஒரு நன்றியை கூறி இந்த பட்டறிவு பயணத்தின் அனுபவங்களை  சாதனைகளாக மாற்ற உறுதி பூண்டுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன்  விவசாயிகளின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறறேன்.


,       


என்றும் விவசாயிகளின் நலனில்,
R சிவ்ச்லிங்கம், 
ஆத்மா இயற்கை விவசாய விளைபொருள்  விற்பனை குழு                      
கெளரிசெட்டிபட்டி,
பிக்கம்பட்டி அஞ்ஜல்,
பென்னகரம் வட்டம்,
தருமபுரி மாவட்டம்.

                                  

இயற்கைக்கு மரியாதை!
உழவர் சந்தையில் உள் ஒதுக்கீடு
எஸ்.ராஜாசெல்லம்
படங்கள்: எம். தமிழ்ச்செல்வன்


10/Nob/2011 பசுமை விகடன் இதழில்
'உழுதவர்களுக்கே உழைப்பின் முழுப்பலனும் கிடைக்க வேண்டும்' என்கிற எண்ணத்தில் தமிழகம் முழுவதும் தொடங்கப்பட்டவை உழவர் சந்தைகள். 'நியாயமான விலையில், தோட்டத்தில் பறித்த சூட்டோடு நுகர்வோருக்கு காய்கறிகள் கிடைக்க வேண்டும்' என்பது இதன் பக்கவிளைவாக கிடைத்த இன்னொரு பலன்!

உழவர் சந்தைகளின் முக்கியத்துவம் உணரப்படாததன் பலனாக, தமிழகத்தில் பல உழவர் சந்தைகள் வெறிச்சோடி கிடக்கின்றன. அதேசமயம், முக்கியத்துவத்தை உணர்ந்து, பல சந்தைகள் சத்தமில்லாமல், சாதனை படைத்துக் கொண்டும் இருக்கின்றன. இந்நிலையில், தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு தாலூகா உழவர் சந்தையில்... இயற்கை வழி விவசாயத்தில் விளைந்த விளைபொருட்களை விற்பனை செய்வதற்காகவே தனியாக கடைகளை ஒதுக்கித் தந்து இயற்கை வழி விவசாயிகளுக்குவழிகாட்டியிருக்கிறதுமாவட்ட நிர்வாகம்!









சமீபத்தில், பாலக்கோடு பகுதியில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் லில்லி, உழவர் சந்தைக்கும் ஒரு விசிட் அடித்து, 'இயற்கை முறையில் விளைவிக்கப்படும் பொருட்களை மட்டுமே விற்பனை செய்ய சந்தையில் தனிக்கடையை ஏற்பாடு செய்தால் என்ன..?’ என அதிகாரிகளிடம் கேட்டிருக்கிறார். இதையடுத்து, மாவட்ட வேளாண் விற்பனை மற்றும் வணிகப்பிரிவு அதிகாரிகள் களத்தில் இறங்கி ஆய்வுகளை மேற்கொண்டனர். அருகிலுள்ள பென்னாகரம் தாலூகாவுக்கு உட்பட்ட கவுரிசெட்டிப்பட்டி கிராமத்தில் 'ஆத்மா விளைபொருள் விவசாயிகள் நலச்சங்கம்’ என்கிற பெயரில் 45 விவசாயிகள் இயற்கை முறையில் மட்டுமே விவசாயம் செய்து வருவது, அதிகாரிகளுக்கு வசதியாக அமைந்தது. இதை கலெக்டர் கவனத்துக்குக் கொண்டு போகவே, அச்சங்கத்தினருக்காக உழவர் சந்தையில் நிரந்தரமாக கடைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
காய்கறி விற்பனையில் மும்முரமாக இருந்த இயற்கை விவசாயி முருகேசன், ''பாகல், பீர்க்கு, புடலை, கத்திரி, தக்காளி, பீன்ஸ், முள்ளங்கி, வெண்டை, கொத்தவரை, சின்ன வெங்காயம்னு காய்கறிகளை சாகுபடி செஞ்சுட்டு வர்றோம். தினமும் 5 டன் அளவுக்குக் காய்கறிகளை கோயம்புத்தூர், கேரளாவுக்குத்தான் அனுப்பிட்டு இருந்தோம். இப்போ, உள்ளூர்லயும் விற்பனைக்கு வாய்ப்பு கிடைச்சது எங்களுக்கு பெரிய உதவியா இருக்கு. மாவட்ட வேளாண் விற்பனைப் பிரிவு துணை இயக்குநரா இருக்குற செல்வம், விற்பனைப் பிரிவு அலுவலர் தாம்சன் ரெண்டு பேரும், கலெக்டரோட உத்தரவுப்படி ரெண்டு கடைகளை எங்களுக்கு நிரந்தரமா ஒதுக்கிக் கொடுத்திருக்காங்க. ஆத்மா குழுவுல இருக்குற விவசாயிகள், சுழற்சி முறையில் இங்க கடை போடுறோம்.
இயற்கை விளைபொருட்களுக்கு முதல்ல மக்கள் மத்தியில பெரிய வரவேற்பு இல்லை. ஆனா... இதோட ருசி, விஷமற்றத் தன்மை இதைப்பத்தியெல்லாம் எடுத்துச் சொன்ன பிறகு, நிறையபேர் வாங்க ஆரம்பிச்சுட்டாங்க. இப்போ தினசரி 400 கிலோவுக்குக் குறையாம விற்பனையாகுது.
இயற்கை மற்றும் ரசாயனம்னு ரெண்டு வகைகள்ல விளைவிச்ச காய்கறிகளுக்கும் ஒரேமாதிரிதான் இங்க விலை நிர்ணயம் செய்றாங்க. ஆனா, மத்தவங்க கடையைக் காட்டிலும் எங்ககிட்ட வியாபாரம் வேகமா நடந்துடுது. இயற்கை விளைபொருளுக்கான வரவேற்பைப் பார்த்துட்டு இங்கே கடை வைக்கும் மத்த விவசாயிகள்கூட இயற்கை விவசாயத்தைப் பத்தி ஆர்வமா விசாரிக்க ஆரம்பிச்சுட்டாங்க'' என்கிறார் மகிழ்ச்சி பொங்க.
பசுமை விகடன் சார்பில் நன்றி தெரிவிப்பதற்காக மாவட்ட ஆட்சித்தலைவர் லில்லியைச் சந்தித்தபோது... ''இயற்கை விளைபொருட்களில் ஆரோக்கியம் அதிகம் என்கிற கொள்கையில் எனக்கும் உடன்பாடு உண்டு. பாலக்கோடு சந்தைக்கு ஆய்வு நடத்தச் சென்றபோது திடீரென மனதில் தோன்றியதை, அதிகாரிகளிடம் கூறினேன். அவர்களும் உடனே ஏற்பாடு செய்துவிட்டனர். மக்கள் மத்தியிலும் வரவேற்பு கிடைத்துள்ளது. விவசாயிகள் இயற்கை முறையில் விளைவித்து விற்பனைக்குக் கொண்டு வர தயாராக இருக்கும்பட்சத்தில், மற்ற உழவர் சந்தைகளிலும் அவர்களுக்கென்று பிரத்யேகமாக கடைகள் ஒதுக்கித் தரப்படும்'' என்று அக்கறையோடு சொன்னார்.
இந்த இனிய தொடக்கம்... தமிழகம் முழுக்க பரவட்டும்.
 10/feb/2012  பசுமை விகடன் இதழில் எங்களது இரண்டாவது  



  http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=15379


40 செண்ட் சுரைக்காய்... 40 செண்ட் பாகற்காய்...     
ஆத்மா விவசாயிகள் சங்கத்தின் அசத்தல் சாகுபடி
எஸ்.ராஜாசெல்லம்
படங்கள் : .தனசேகரன்
'சுமை விகடன்' 25.3.11-ம் தேதியிட்ட இதழில் 'நாட்டு மாடு வாங்கிட்டோம்... இயற்கைக்கு மாறிட்டோம்..!’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது. தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் தாலூகாவில் உள்ள கவுரிசெட்டிப்பட்டி கிராமத்தைச் சுற்றியுள்ள 45 விவசாயிகள் இணைந்து இயற்கை விவசாயம் செய்வதைப் பற்றிய கட்டுரைதான் அது. கிட்டத்தட்ட ஓராண்டு நெருங்கும் நிலையில், அவர்களின் இயற்கை விவசாயம் எப்படி இருக்கிறது என்பதை அறிந்துகொள்வதற்காக அங்கே ஒரு நடைபோட்டோம்!  
 மாற்றத்தை ஏற்படுத்திய பசுமை விகடன்!
ரசாயனத்தின் பின்னால் ஓடிக் கொண்டிருந்த விவசாயிகளை இயற்கையின் பக்கம் இழுத்தவர், கவுரிசெட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிவலிங்கம். கம்யூனிஸ்ட் கட்சியின் முழு நேர ஊழியரான இவர், தற்போது, முழு நேர விவசாயி. இவர்தான் தற்போது இயற்கைக்கு மாறியிருக்கும் விவசாயிகள் அமைத்திருக்கும், 'ஆத்மா இயற்கை விவசாய விளைபொருள் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தின் தலைவர்.  
''நாங்க இந்தளவு முன்னேறுனதுக்கு முக்கியமான காரணம் 'பசுமை விகடன்தான். அதுல வர்ற கட்டுரைகளைப் பத்தி ஊருக்குள்ள நண்பர்கள்கிட்ட அடிக்கடி பேசுவேன். அப்படிப் பேசும்போதுதான், 'நாம ஒண்ணா சேர்ந்து இயற்கை விவசாயம் செய்யலாமேனு எண்ணம் தோணுச்சு. அதுல உருவானதுதான் எங்க சங்கம்.





அதுக்கான வேலைகள்ல நாங்க இறங்கினப்பவே எங்களைப் பத்தி செய்தி வெளியிட்டு, எங்களை ஊக்கப்படுத்தினது பசுமை விகடன்தான். அதுக்கப்பறம் நிறைய பேர் எங்ககிட்ட பேச ஆரம்பிச்சாங்க. அதனால, எங்களுக்கான பொறுப்பு அதிகமாயிடுச்சு. அந்த ஊக்கத்துலதான் நாங்க இன்னமும் ஆர்வமா செயல்பட்டுக்கிட்டிருக்கோம். இப்போ எங்க சங்கத்துல 45 உறுப்பினர்கள் இருக்காங்க'' என்ற சிவலிங்கம் தங்களின் சாகுபடி முறைகளைப் பற்றி விளக்கினார்.
ஆரம்பத்தில் அரை ஏக்கர்... இப்போது ஒன்றரை ஏக்கர்!
''ஆரம்பத்துல, குறைஞ்சபட்சம் அரை ஏக்கர்ல மட்டுமாவது இயற்கை முறையில சாகுபடி செய்யணும்னுதான் இறங்கினோம். ஆனா, இப்போ, ஒவ்வொருத்தரும் ஒன்றரை ஏக்கருக்கும் குறையாம இயற்கை முறையில சாகுபடி செய்யுறோம்.
ஒவ்வொரு வாரமும் ரெண்டு அல்லது மூணு தடவை காய்கறிகளை கோயம்புத்தூர், கேரளானு வெளிய அனுப்புறோம். எல்லாரும் கலந்து பேசி வெச்சுக்கிட்டு, ஒவ்வொருத்தரும் இன்னின்ன காய்னு பிரிச்சு வெச்சு சாகுபடி செய்றோம்.

பாகங்களாகப் பிரித்து சாகுபடி!
என்னோட நிலத்தை நாப்பது சென்ட் அளவுல தனித்தனி பாகமாப் பிரிச்சு வெச்சிருக்கேன். அதுல ஒரு பாகத்துல சுரைக்காய் போட்டிருந்தேன். இப்போ முழுசா அறுவடை முடிஞ்சிருச்சு. அது முடியும்போது அறுவடைக்கு வர்ற மாதிரி இன்னொரு பாகத்துல பாகல் போட்டிருந்தேன். இப்போ இதோட அறுவடை முடியற தறுவாயில இருக்கு. இதேபோலத்தான் புடலங்காய், பீன்ஸ்னு ஒவ்வொரு பாகத்துலயும் ஒவ்வொண்ணா பிரிச்சு பிரிச்சு போட்டிருக்கேன்.
வாரத்துக்கு 3,500 ரூபாய் லாபம்!
ஒவ்வொரு காய் அறுவடை முடியுறப்பயும் இன்னொரு காய் அறுவடைக்கு வந்துடும். சில சமயங்கள்ல ஒரே நேரத்துல ரெண்டு வகையான காய்களும் கிடைச்சுட்டு இருக்கும். சுரைக்காய்ல மட்டும் நாலு மாசத்தில் மொத்தமா 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல லாபம் கிடைச்சுது. ஒரு காய்ல கிடைக்கற லாபத்தை வெச்சே, இன்னொரு காய்க்கு செலவு பண்ணிடலாம். ஒவ்வொரு காய்லயும் எல்லா செலவும் போக வாரத்துக்கு, சராசரியா 3 ஆயிரத்து 500 ரூபாய்க்குக் குறையாம லாபம் கிடைச்சுட்டிருக்கு. இதேமாதிரி சுழற்சி முறையிலதான் எல்லாருமே சாகுபடி செய்றோம்.
இயற்கை இடுபொருட்கள்!

அடியுரமா தொழுவுரம்தான் போடுவோம். சுத்து வட்டாரத்துல எங்க கிடைச்சாலும், தொழுவுரத்தை வாங்கிட்டு வந்து இருப்பு வெச்சிடுவோம். தேவைப்பட்டா.... புங்கன்கொட்டை, ஆமணக்கு, வேப்பம்பிண்ணாக்கு, கடலைப்பிண்ணாக்குனு ஏதாவது ஒண்ணை அதுல கலந்துக்குவோம். வளர்ச்சி ஊக்கியா பஞ்சகவ்யா, அமுதக்கரைசல் கொடுக்கிறோம். பூ உதிர்ந்தா... மோர், டிரைக்கோடெர்மா விரிடி ரெண்டையும் கலந்து தெளிப்போம். முட்டையோட வெள்ளைக்கரு, வேப்பெண்ணெய், காதி சோப்... இது மூணையும் கலந்தும் தெளிக்கலாம்.
அக்னி அஸ்திரத்துக்கு ஈடு இணை இல்லை!
காய்கறிச் செடிகள்ல பெரும்பாலும் அசுவிணி, பேன், சாறு உறிஞ்சும் பூச்சிகளோட தொல்லை அதிகமா இருக்கும். பொதுவா பூச்சிகள் வர்றதுக்கு முன்னாடியே ஐந்திலைக் கரைசலைத் தெளிச்சிடுவோம். இதைத் தெளிச்சிட்டா எந்தப் பூச்சியும் பக்கத்துலேயே வராது. அதையும் மீறி வர்றப்போ... அருவாமனைப் பூண்டுகளைப் பிடுங்கிட்டு வந்து அரைச்சு, சாறு எடுத்து 1:10 விகிதத்துல தண்ணியில கலந்து பயிர்கள்ல தெளிச்சுடுவோம். இதையெல்லாம் கடந்தும் பூச்சி பாதிப்பு இருந்தா, கடைசி ஆயுதம்... 'அக்னி அஸ்திரம்தான். பாதிப்புக்கேத்த அளவுக்கு இதை அடிச்சி விட்டோம்னா... ஒரு பூச்சி, பொட்டு இருக்காது. இதுக்கு அடங்காத பூச்சிகளே இல்லைனுதான் சொல்லணும்'' என்ற சிவலிங்கத்தைத் தொடர்ந்தார் சங்கத்தின் செயலாளரான கொட்லுமாரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜ்.  
மாயம் செய்த பஞ்சகவ்யா!
''நான் 30 சென்ட்ல சுரைக்காய் போட்டிருந்தேன். விளைஞ்ச சமயத்துல காய்களைப் பாத்து கண் போடாத ஆளுங்களே இல்லை. ஏன்னா, என்னோட மண் நுரம்பு மண். இப்படிப்பட்ட மண்ணுல, இந்த அளவுக்கு விளைஞ்சதுக்கு காரணமே... பஞ்சகவ்யா மகிமைதான். இப்போ ரெண்டு ஏக்கர்ல தர்பூசணி போட்டிருக்கேன்.
உரம், பூச்சிக்கொல்லி இதெல்லாம் விலை ஏறுறதைப் பத்தி எங்களுக்கெல்லாம் கவலையே கிடையாது. ஆள் பிரச்னை மட்டும்தான் எங்களுக்கு ஒரே கவலை. ஆனாலும், நாங்களே ஓடியாடி உழைச்சு சரி பண்ணிக்கிறோம். அதுக்கேத்த மாதிரி எங்களுக்கு லாபமும் கிடைக்குது. எங்க கலெக்டரும், வேளாண் விற்பனை மற்றும் வணிகப்பிரிவு அதிகாரிகளும் பாப்பிரெட்டிப்பட்டி கே.வி.கே. மையத்தினரும் நல்லா உதவி செய்றாங்க. அது எங்களுக்குக் கூடுதல் பலம்'' என்று நன்றி பெருக்கோடு சொன்னார்.
'தான் பெற்ற இன்பம்... பெறுக இவ்வையகம்' என்பதுபோல, தாங்கள் மட்டும் இயற்கை விவசாயத்தை செய்து கொண்டிருக்காமல், அக்கம் பக்கமிருக்கும் விவசாயிகளுக்கும் அதன் பலன் சென்று சேரும் வகையில், 'ஆத்மா இயற்கை விவசாய விளைபொருள் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தினர் செயல்பட்டுக் கொண்டிருப்பது கூடுதல் சிறப்பு.
தொட்டிப்பள்ளத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் தனக்குச் சொந்தமான ஏழு ஏக்கர் நிலத்தில், இரண்டரை ஏக்கரை இயற்கை முறை சாகுபடிக்கு என ஒதுக்கி இருக்கிறார்.
தினந்தோறும் டீக்கடைகளில் அமர்ந்து இயற்கை விவசாயம் குறித்து ராஜேந்திரன் நடத்தும் பிரசங்கத்தால் கவரப்பட்ட ஆசிரியர் ஒருவர், தற்போது மெள்ள இயற்கை விவசாயத்தை நோக்கி நகர்ந்து வருகிறார்.
இதே பகுதியைச் சேர்ந்த கோவிந்தசாமி தன் எட்டு ஏக்கர் நிலத்தையும் இயற்கையின் பக்கம் திருப்பி விட்டார். இவருடைய நிலத்தில் இயற்கை விவசாயத்தில் மரவள்ளி, மஞ்சள், தக்காளி, பெல்ட் அவரை என சாகுபடி செய்கிறார்.
இச்சங்கத்தினர் 15 நாட்களுக்கு ஒருமுறை தவறாமல், ஆலோசனைக் கூட்டம் நடத்தி, ஒவ்வொருவரின் அனுபவத்தையும் அலசுகிறார்கள். ஒவ்வொரு கூட்டத்திலும், ஒவ்வொரு உறுப்பினரும் சந்தா தொகையாக நூறு ரூபாயை வழங்குகின்றனர். இப்படி சேரும் மொத்தத் தொகையை இவர்களுக்குள்ளாகவே குறைந்த வட்டியில் கடன் கொடுத்து மாற்றிக் கொள்கின்றனர்.
'கூடி வாழ்ந்தால்... கோடி நன்மைஎன்ற பழமொழிக்கு உதாரணமாக நின்று கொண்டிருக்கும் அந்த விவசாயிகளைக் கை தொழுது விடைபெற்றோம்!
தொடர்புக்கு,
சிவலிங்கம்,
செல்போன்: 97875-45231.