ஆத்மா இயற்கை வேளண்மை உற்பத்தி மற்றும்விளைபொருள் குழுவின் முதன் பயனம் பசுமை விகடன் இதழில்
'நாட்டுமாடு வாங்கிட்டோம்...இயற்கைக்கு மாறிட்டோம்..!'
கூட்டுப்பண்ணை
எஸ்.ராஜாசெல்வம்
எஸ்.ராஜாசெல்வம்
இயற்கை வழி விவசாயத்தைத் தொட்டுப் பார்ப்பவர்கள், அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் களத்தில் இறங்குவார்கள். ஆனால், தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் ஒன்றியத்தைச் சேர்ந்த பிளியனூர், தித்தியோப்பனஅள்ளி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த ஐம்பது விவசாயிகள் ஒரு குழுவாக இணைந்து, ஒரே மூச்சில் இயற்கை வழி விவசாயத்தைக் கையில் எடுத்துள்ளனர்.
இதற்கு அச்சாரமாக அமைந்தவரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாயப் பிரிவு மாவட்டத் துணைத்தலைவருமான சிவலிங்கம் அதைப் பற்றி ஆர்வம் பொங்க நம்மிடம் பேசினார்.
''நாங்க எல்லாருமே கிட்டத்தட்ட நண்பர்கள்தான். ரெண்டு ஏக்கர்ல இருந்து எட்டு ஏக்கர் வரைக்கும் ஆளுக்குத் தகுந்த மாதிரி எங்ககிட்ட நிலமிருக்கு. பலகாலமா நாங்க ரசாயன விவசாயத்தைத்தான் செய்துகிட்டிருக்கோம். ஆனா, பெருசா எந்த முன்னேற்றமும் இல்ல. உரம், பூச்சிமருந்து, கமிஷன் கடைனு எங்க உழைப்பு பூரா மத்த ஆளுங்களுக்குத்தான் பயன்பட்டுக்கிட்டிருக்கு. விவசாயத்துக்கானச் செலவைக் குறைச்சாத்தான் நம்மளால முன்னேற முடியும்கிற எண்ணம் எங்க எல்லாருக்குமே வந்துச்சு. இதுக்குக் காரணம்... நம்மாழ்வாரோட பிரசாரமும்... பசுமை விகடனோட வழிகாட்டுதலும்தான்.
அடிக்கடி இதைப் பத்தியே பேசிட்டிருந்த நாங்க, ஒட்டுமொத்தமா இயற்கை வழி விவசாயத்தைக் கையில எடுக்கலாம்னு தீர்மானிச்சோம். முதற்கட்டமா... ஆளுக்கு அரை ஏக்கர்ல இயற்கை விவசாயத்தை ஆரம்பிக்க முடிவு செய்து, அதுக்கான பணிகளைத் தொடங்கியிருக்கோம். எங்க பகுதி வேளாண் அதிகாரிகளும் ரொம்பவே உதவியா இருக்காங்க.
பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் மையத்துல இயற்கை விவசாயம் சார்ந்த கலந்துரையாடல் கூட்டத்தை நடத்தி எங்களுக்குத் தேவையான தொழில்நுட்பத்தைக் கிடைக்கச் செய்திருக்காங்க.
இந்தக் கூட்டம் முடிஞ்ச கையோட, இயற்கை உரத்துக்குத் தேவையான நாட்டு மாடுகளை வாங்கிட்டோம். போயர் இன ஆடுகளையும் வாங்கி வளர்க்க ஆரம்பிச்சிருக்கோம். கூடிய சீக்கிரமே, ஒட்டுமொத்த கிராமங்களும் இயற்கை விவசாயத்துக்கு மாறிடுச்சுங்கற செய்தி வரும். அந்த அளவுக்கு நாங்க இதுல முழுமூச்சா பாடுபடுவோம். ஏன்னா... இந்த விவசாயம்தான் விவசாயிகளோட ஒட்டுமொத்த பிரச்னைக்கும் ஒரே தீர்வா இருக்கும். இதைவிட்டா விவசாயிகளோட விடுதலைக்கு வேற வழியே இல்ல'' என்று ஆர்வத்தோடு சொன்னார்.
இப்படி இயற்கைக்காக கைகோத்திருக்கும் இந்த விவசாயிகள், ''கேரள மாநில அரசு இயற்கை விவசாயத்துக்கு உதவுவது போலவே, தமிழக அரசும் நிறைய உதவிகளைச் செய்ய முன்வர வேண்டும்'' என்று கோரிக்கை வைக்கிறார்கள்.
0 comments:
Post a Comment