Tuesday, November 19, 2013


இயற்கைக்கு மரியாதை!
உழவர் சந்தையில் உள் ஒதுக்கீடு
எஸ்.ராஜாசெல்லம்
படங்கள்: எம். தமிழ்ச்செல்வன்


10/Nob/2011 பசுமை விகடன் இதழில்
'உழுதவர்களுக்கே உழைப்பின் முழுப்பலனும் கிடைக்க வேண்டும்' என்கிற எண்ணத்தில் தமிழகம் முழுவதும் தொடங்கப்பட்டவை உழவர் சந்தைகள். 'நியாயமான விலையில், தோட்டத்தில் பறித்த சூட்டோடு நுகர்வோருக்கு காய்கறிகள் கிடைக்க வேண்டும்' என்பது இதன் பக்கவிளைவாக கிடைத்த இன்னொரு பலன்!

உழவர் சந்தைகளின் முக்கியத்துவம் உணரப்படாததன் பலனாக, தமிழகத்தில் பல உழவர் சந்தைகள் வெறிச்சோடி கிடக்கின்றன. அதேசமயம், முக்கியத்துவத்தை உணர்ந்து, பல சந்தைகள் சத்தமில்லாமல், சாதனை படைத்துக் கொண்டும் இருக்கின்றன. இந்நிலையில், தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு தாலூகா உழவர் சந்தையில்... இயற்கை வழி விவசாயத்தில் விளைந்த விளைபொருட்களை விற்பனை செய்வதற்காகவே தனியாக கடைகளை ஒதுக்கித் தந்து இயற்கை வழி விவசாயிகளுக்குவழிகாட்டியிருக்கிறதுமாவட்ட நிர்வாகம்!









சமீபத்தில், பாலக்கோடு பகுதியில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் லில்லி, உழவர் சந்தைக்கும் ஒரு விசிட் அடித்து, 'இயற்கை முறையில் விளைவிக்கப்படும் பொருட்களை மட்டுமே விற்பனை செய்ய சந்தையில் தனிக்கடையை ஏற்பாடு செய்தால் என்ன..?’ என அதிகாரிகளிடம் கேட்டிருக்கிறார். இதையடுத்து, மாவட்ட வேளாண் விற்பனை மற்றும் வணிகப்பிரிவு அதிகாரிகள் களத்தில் இறங்கி ஆய்வுகளை மேற்கொண்டனர். அருகிலுள்ள பென்னாகரம் தாலூகாவுக்கு உட்பட்ட கவுரிசெட்டிப்பட்டி கிராமத்தில் 'ஆத்மா விளைபொருள் விவசாயிகள் நலச்சங்கம்’ என்கிற பெயரில் 45 விவசாயிகள் இயற்கை முறையில் மட்டுமே விவசாயம் செய்து வருவது, அதிகாரிகளுக்கு வசதியாக அமைந்தது. இதை கலெக்டர் கவனத்துக்குக் கொண்டு போகவே, அச்சங்கத்தினருக்காக உழவர் சந்தையில் நிரந்தரமாக கடைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
காய்கறி விற்பனையில் மும்முரமாக இருந்த இயற்கை விவசாயி முருகேசன், ''பாகல், பீர்க்கு, புடலை, கத்திரி, தக்காளி, பீன்ஸ், முள்ளங்கி, வெண்டை, கொத்தவரை, சின்ன வெங்காயம்னு காய்கறிகளை சாகுபடி செஞ்சுட்டு வர்றோம். தினமும் 5 டன் அளவுக்குக் காய்கறிகளை கோயம்புத்தூர், கேரளாவுக்குத்தான் அனுப்பிட்டு இருந்தோம். இப்போ, உள்ளூர்லயும் விற்பனைக்கு வாய்ப்பு கிடைச்சது எங்களுக்கு பெரிய உதவியா இருக்கு. மாவட்ட வேளாண் விற்பனைப் பிரிவு துணை இயக்குநரா இருக்குற செல்வம், விற்பனைப் பிரிவு அலுவலர் தாம்சன் ரெண்டு பேரும், கலெக்டரோட உத்தரவுப்படி ரெண்டு கடைகளை எங்களுக்கு நிரந்தரமா ஒதுக்கிக் கொடுத்திருக்காங்க. ஆத்மா குழுவுல இருக்குற விவசாயிகள், சுழற்சி முறையில் இங்க கடை போடுறோம்.
இயற்கை விளைபொருட்களுக்கு முதல்ல மக்கள் மத்தியில பெரிய வரவேற்பு இல்லை. ஆனா... இதோட ருசி, விஷமற்றத் தன்மை இதைப்பத்தியெல்லாம் எடுத்துச் சொன்ன பிறகு, நிறையபேர் வாங்க ஆரம்பிச்சுட்டாங்க. இப்போ தினசரி 400 கிலோவுக்குக் குறையாம விற்பனையாகுது.
இயற்கை மற்றும் ரசாயனம்னு ரெண்டு வகைகள்ல விளைவிச்ச காய்கறிகளுக்கும் ஒரேமாதிரிதான் இங்க விலை நிர்ணயம் செய்றாங்க. ஆனா, மத்தவங்க கடையைக் காட்டிலும் எங்ககிட்ட வியாபாரம் வேகமா நடந்துடுது. இயற்கை விளைபொருளுக்கான வரவேற்பைப் பார்த்துட்டு இங்கே கடை வைக்கும் மத்த விவசாயிகள்கூட இயற்கை விவசாயத்தைப் பத்தி ஆர்வமா விசாரிக்க ஆரம்பிச்சுட்டாங்க'' என்கிறார் மகிழ்ச்சி பொங்க.
பசுமை விகடன் சார்பில் நன்றி தெரிவிப்பதற்காக மாவட்ட ஆட்சித்தலைவர் லில்லியைச் சந்தித்தபோது... ''இயற்கை விளைபொருட்களில் ஆரோக்கியம் அதிகம் என்கிற கொள்கையில் எனக்கும் உடன்பாடு உண்டு. பாலக்கோடு சந்தைக்கு ஆய்வு நடத்தச் சென்றபோது திடீரென மனதில் தோன்றியதை, அதிகாரிகளிடம் கூறினேன். அவர்களும் உடனே ஏற்பாடு செய்துவிட்டனர். மக்கள் மத்தியிலும் வரவேற்பு கிடைத்துள்ளது. விவசாயிகள் இயற்கை முறையில் விளைவித்து விற்பனைக்குக் கொண்டு வர தயாராக இருக்கும்பட்சத்தில், மற்ற உழவர் சந்தைகளிலும் அவர்களுக்கென்று பிரத்யேகமாக கடைகள் ஒதுக்கித் தரப்படும்'' என்று அக்கறையோடு சொன்னார்.
இந்த இனிய தொடக்கம்... தமிழகம் முழுக்க பரவட்டும்.

0 comments:

Post a Comment